Skip to content

திருச்சியில் சிறுமி வன்கொடுமை… 4பேருக்கு நிபந்தனை ஜாமீன்…. ஒருவர் சிறையில் அடைப்பு…

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் பயின்ற 4 ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வழக்கம் போல் சென்ற நிலையில், வகுப்பறையில் இருந்த மாணவியிடம் பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்தகுமாருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன் வசந்த குமாரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்த அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொருக்கினர்.

மேலும் அங்கிருந்த காரின் கண்ணாடியையும் உடைத்து நொறுக்கி காரை கவிழ்த்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படவே போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடனடியாக வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் செல்வநாகரத்தினம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும், இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மராட்ச்சி, செழியன், சுதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலெட்சுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை ஜெயலட்சுமி மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் 5 பேர்கள் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டது.

இதனை தொடர்ந்து மணப்பாறை தனியார் பள்ளியில் பாலியல் சீண்டல் விவகாரம் தொடர்பாக தனியார் மற்றும் மெட்ரிக்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் கல்வி அதிகாரிகள், பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து பள்ளி மாணவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய 4 பேர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்கிற அடிப்படையில் பிணை வழங்கினார். இந்த வழக்கின் முதல் குற்றவாளியான வசந்தக்குமாருக்கு வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!