முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், தற்போதைய மத்திய அமைச்சர் குமாரசாமியின் அண்ணன் மகனுமான ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது கர்நாடக மாநிலத்தில் 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு வழக்கில் ஏற்கனவே போலீசார் பிரஜ்வலை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை . பின்னர் அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றொரு பலாத்கார வழக்கில் நேற்று முன்தினம் போலீசார் பிரஜ்வலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து, பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பதிவான பலாத்கார வழக்கு குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அப்போதும் அவர் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. நான் முன்னாள் பிரதமர் பேரன், மத்திய அமைச்சரின் அண்ணன் மகன் என்ற தொனியில் போலீசாரை முறைத்து பார்த்தாரே தவிர பதில் அளிக்கவில்லை.
சாதாரண சாமான்ய மக்கள் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டால் அவர்களை அடித்து உதைத்து பாடாய்படுத்தும் போலீசார் பிரஜ்வல் விஷயத்தில் அத்தனை கடுமையை காட்டவில்லை. இதனால் அவர் போலீஸ் கஸ்டடியில் ஜாலியாக காணப்பட்டார்.எனவே பிரஜ்வல்லுக்கு அடுத்த கட்ட விசாரணையை தொடங்கலாமா என போலீசாா் ஆலோசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.