காக்கும் கரங்கள் திட்டம் மூலம் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, “தாய் நாட்டிற்காக தங்களுடைய இளம் வயது முழுவதையும் ராணுவ சேவையில் கழித்து நம் நாட்டை காத்த முன்னாள் படை வீரர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யக் கூடிய வகையில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காக்கும் கரங்கள் திட்டம் மூலம் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு, வங்கிகள் மூலமாக 1 கோடி ரூபாய் கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையில் 30 சதவிகிதம் மூலதனம் மானியமாக வழங்கப்படும்; 3 சதவிகிதம் வட்டி மானியமாக வழங்கப்படும்.
இந்த தொழிலை தொடங்குவதற்கு முன்னாள் படை வீரர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்குவதற்கும், அவர்களுக்கான மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 400 முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பில், ஏறத்தாழ ரூ.120 கோடி மூலதன மானியம் மற்றும் மூன்று விழுக்காடு வட்டி மானியமும் சேர்த்து வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.