இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தலில், தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி உள்ளிட்ட 14 பேர் போட்டியிடுகின்றனர். சிதம்பரம் நாடாளுமன்ற த்தில், 7,53,643 ஆண் வாக்காளர்களும், 7, 66,118 பெண் வாக்காளர்களும், 86 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 15,19,847 வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். நாளை குன்னம் சட்டமன்றத்தில் 320 வாக்கு சாவடிகளிலும், அரியலூர் சட்டமன்றத்தில் 306 வாக்கு சாவடிகளிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தில் 290 வாக்குச்சாவடிகளிலும், புவனகிரி சட்டமன்றத்தில் 283 வாக்குச்சாவடிகளிலும், சிதம்பரம் சட்டமன்றத்தில் 260 வாக்குச்சாவடிகளிலும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத்தில் 250 வாக்குச் சாவடிகளிலும் சேர்த்து மொத்தம் 1709 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். வாக்குப்பதிவினை நடத்திட தேர்தல் ஆணையம் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரால் 1709 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 8259 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப் பதிவிற்கு தேவையான கட்டுப்பாட்டு இயந்திரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி ஆகிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் மொத்தம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு 6323 தயார் நிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் குன்னம் சட்டமன்றத்திற்கு 1184 இயந்திரங்களும், அரியலூர் சட்டமன்றத்திற்கு 1131
இயந்திரங்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத்திற்கு 1073 இயந்திரங்களும், புவனகிரி சட்டமன்றத்திற்கு 1048 இயந்திரங்களும், சிதம்பரம் சட்டமன்றத்திற்கு 962 இயந்திரங்களும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத்திற்கு 925 இயந்திரங்களும் சேர்த்து மொத்தம் 6323 இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. ஆறு சட்டமன்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அறையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு சாவடிகளுக்கு கொண்டு செல்லும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு பதிவிற்கு தேவையான ஆவணங்கள் ஆகியவை மண்டலம் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, வேன்களில் துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.