திருச்சி திருவெறும்பூர் தாலுகா கீழக்குறிச்சி என்ற கிராமத்தில் ராணி மங்கம்மா ஆட்சி காலத்து மண்டபம் ஒன்று பாழடைந்த நிலையில் இருந்தது. இதற்கு யாரும் உரிமை கோரவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென அந்த மண்டபம் கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டா இடம் என்றும் ஐகோர்ட் மதுரை கிளை மூலம் இது உறுதி் செய்யப்பட்டுள்ளதாகவும் அதை அடிக்க உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதியில் ஒரு பிளக்ஸ் பேனர் தொங்கவிடப்பட்டிருந்தது.
இதைப்பார்த்த கீழக்குறிச்சி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மண்டபம் ராணி மங்கம்மா காலத்தில் கட்டப்பட்டது எப்படி தனி நபருக்கு சொந்தமாக இருக்க முடியும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் படத்தில் காணப்பட்ட அந்த மண்டபம் திடீரென இரவோடு இரவாக இடிக்கப்பட்டுவிட்டது.
இன்று காலையில் அந்த மண்டபத்தை காணவில்லை. தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. இதனால் கீழக்குறிச்சி மக்கள் மனுநீதி நாளான இன்று கலெக்டரிடம் மனு கொடுக்க பெண்கள் உள்பட ஏராளமானோர் திரண்டு வந்தனர். கலெக்டர் இல்லாததால் மனுநீதி நாள் முகாம் நடத்திய அதிகாரியிடம் மனு கொடுத்தனர். மங்கம்மா காலத்து மண்டபம் அரசின் சொத்து, அதை தனியார் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க கூடாது என மனுவில் கூறி இருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து கீழக்குறிச்சி மக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகம் சென்று மனு கொடுத்தனர்.