ஆந்திர பிரதேசத்தில் நெல்லூர் மாவட்டத்தில் கவாலி என்ற இடத்தில் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இதில், இரண்டாம் ஆண்டு படித்து வந்த பிரதீப் என்ற மாணவர் காலுகொலம்மாபேட்டை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்ற போது ரயில் மோதி இறந்தார். தற்செயலாக நடந்த விபத்து என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அது விபத்து அல்ல என்றும், மூத்த மாணவர்களின் ராகிங் தொல்லையால் பிரதீப் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் பெஞ்சாலையா மற்றும் லட்சுமி குமாரி ஆகியோர் புகார் கூறியுள்ளனர். அவர்கள் மூத்த மாணவர்கள் சிலரது ராகிங் தொல்லையால் பிரதீப் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கல்லூரியின் மூத்த மாணவர்கள் மற்றும் கல்லூரிக்கு வெளியே உள்ள சிலரும், தங்களது மகனுடன் படிக்கும் மாணவிகளின் மொபைல் போன் எண்ணை கேட்டு நெருக்கடி கொடுத்து உள்ளனர். பீர், பிரியாணி வாங்கி வரும்படி கூறி, மொபைல் போனை பறித்தும் உள்ளனர். இதுபற்றி நாங்கள் ஆசிரியர்களிடம் கூறினோம். புகாரை தொடர்ந்து ராகிங் அதிகரித்து விட்டது என கடந்த வாரம் பிரதீப் எங்களிடம் கூறினார். இதனால், கல்லூரி நிர்வாகத்திடம் கல்லூரியில் இருந்து விலகுவதற்கான சான்றிதழை அவர்கள் கேட்டு உள்ளனர். ஆனால், அதுவும் நடக்கவில்லை. விடுதி அறையில் இருந்து வெளியேறினால், தேர்வு எழுத முடியாது, கொலை மிரட்டல் என பிரதீப் அச்சுறுத்தப்பட்டு வந்து உள்ளார். இதனால், பிரதீப் பயந்து போய் விட்டார். ஆனால், தற்கொலை செய்து கொள்வான் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அவரது தந்தை வேதனை தெரிவித்து உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.