கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக அமோகமாக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 100 இடங்களில் திமுக கூட்டணி 96 இடங்களை பெற்றது. அதிமுக 3, சுயேச்சை 1 இடத்தில் வென்றனர். இதைத்தொடர்ந்து 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா கோவை மேயராக தேர்வு செய்யப்பட்டார். 2 வருடம் அவர் பதவி வகித்த நிலையில் திடீரென கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய மேயர் வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று புதிய மேயர் தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணி கவுன்சிலர்கள் கூட்டத்தை அமைச்சர்கள் கே. என். நேரு, முத்துசாமி ஆகியோர் கூட்டி ஆலோசனைகள் வழங்கினர். அந்த கூட்டத்்தில் 63வது வார்டு உறுப்பினர் சாந்தி முருகன், கோவை மாநகராட்சியில் வார்டுகளுக்கு நிதி பகிர்வு சரிவர நடைபெற வி்ல்லை என புகார் கூறினார்.
அதற்கு அமைச்சர்கள் அதைப்பற்றி இப்போது பேச வேண்டாம். வேட்பாளர் ரங்கநாயகியை வெற்றி பெறச்செய்யுங்கள் என்றனர். இதைக்கேட்ட சாந்தி முருகன் அழத் தொடங்கினார். அவரை சில கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தினர். பின்னர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தேர்தலை நடத்தினார். அவரிடம் ரங்கநாயகி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் காலை 11 மணியுடன் நிறைவடைந்தது. அதுவரை வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
எனவே ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என ஆணையர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து மேயர் ரங்கநாயகிக்கு அமைச்சர்கள், கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ரங்கநாயகி கோவையின் 7வது மேயர். 2வது பெண் மேயர் என்பது குறிப்பிடத்க்கது.