இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான ரமலான் இன்று கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் நோன்பு இருந்து ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகையை இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நகர ஐக்கிய ஜமாத் சார்பில் ஈத்கா திடல் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் 3,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
ஏராளமான இஸ்லாமியர்கள் பெருநாள் திடல் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பெருநாள் சிறப்பு தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒருவொருக்கொருவர் கட்டியணைத்தும் கைகொடுத்தும், ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
மயிலாடுதுறையை அடுத்துள்ள சுப்பிரமணியபுரம் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு வாழ்வில் வளமோடு ஒற்றுமை உணர்வோடு சிறப்புற்று வாழவும் உலகில் அன்பும் அறமும் மனிதநேயமும் தழைத்தோங்கவும் சிறப்புத் தொழுகை நடத்தினர்.
தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டி ஆரத்தழுவியும், குழுப் புகைப்படங்கள் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் இன்று இஸ்லரியர்கள் மகிழ்ச்சியுடன் இந்த திருநாளை கொண்டாடி வருகிறார்கள்.