சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து நகரங்களிலும் ரமலான் சிறப்பு தொழுகை நடந்து வருகிறது.
ரமலான் மாதத்தில் மாதம் முழுக்க நோன்பு இருந்த இஸ்லாமியர்கள் இன்று நோன்பை நிறைவு செய்து ரம்லான் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இதைெயாட்டி பள்ளிவாசல்களிலும், திறந்த வெளி மைதானங்களிலும் இஸ்லாமியர்கள் திரண்டு தொழுகை நடத்தினர்.
தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். திருச்சியில் இன்று காலை உழவர் சந்தை மைதானத்திலும் பள்ளிவாசல்களிலும் தொழுகை நடந்தது. இதில் ஆயிரகணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
இதுபோல சென்னை, தஞ்சை, பெரம்பலூர், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது.
சென்னையில் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த தொழுகையில் பல்லாயிரகணக்கான இஸ்லாமியர்கள், புத்தாடை அணிந்து பங்கேற்றனர். எழும்பூர் மாநகராட்சி திடலில் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் பலரும் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்டனர். கோவை கரும்புக்கடைடி பகுதியில் நடந்த தொழுகையில் ஆயிரகணக்கானோர் பங்கேற்றனர்.
ரமலான் திருநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.