சவுதி அரேபியாவில் நேற்று பிறை தெரிந்ததை தொடர்ந்து ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ஒரு மாத காலமாக நோன்பு நோற்று விரதமிருந்த ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இனிப்புகள் பரிமாறி ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை ஒருவரையொருவர் பகிர்ந்துகொண்டனர். இந்த சிறப்பு தொழுகையில் 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இதேபோல நாகையில் பழந்தெரு, வெங்காயக்கார வீதி, மஞ்சக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கரூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் உள்ள தனியார் திடல் ஒன்றில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஏராளமானோர்
கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பிறகு இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
உற்றார், உறவினர், நண்பர்களோடு தங்கள் அன்பையும் சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டு ரம்ஜான் ஈகை திருநாளை தவ்ஹீத் ஜமாஅத் கமிட்டியினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவையிலும் இன்று ரம்ஜான் திருநாள் கொண்டாடப்பட்டது. கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டி சார்பில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நாளை கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.