புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் இருந்து நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர், ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர், கடற்கரை எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் துணி மாற்றுவதற்காக கட்டணம் செலுத்தி உடைமாற்ற சென்றுள்ளனர்.
அப்போது, அறைக்குள் ரகசிய கேமரா இருந்ததை, இளம்பெண் ஒருவர் கண்டுபிடித்து தனது தந்தையிடம் கூறினார். இதுகுறித்து போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் கோவில் போலீசார் வழக்கு பதிந்து, அங்கு வேலை செய்த ஊழியர்களான ராமேஸ்வரம் தம்பியான்கொல்லையை சேர்ந்த ராஜேஷ் கண்ணன்( 34) ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த மீரான் மைதீன்(38) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
உடை மாற்றும் அறையில் பல மாதங்களாக ரகசிய கேமரா வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து, இவர்கள் இருவரும் மொபைல் போனில் பார்த்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மட்டும் பார்த்து ரசித்தார்களா அல்லது மற்றவர்களுக்கு அனுப்பி பணம் சம்பாதித்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
வீடியோக்களில் சிக்கிய பெண்களை தொடர்பு கொண்டு பிளாக் மெயில் செய்தார்களா என்றும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.