திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் திருச்சி மாநகர போலீஸ், தொடங்கி சிபிஐ வரை பல்வேறு விசாரணை குழுக்கள் விசாரித்தும் இதுவரை கொலையாளிகள் யார் என்பது கண்டறியப்படவில்லை. இந்த வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்திட அனுமதிகேட்டு திருச்சி ஜே எம் 6 நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனுசெய்து அவர்களில் 12 பேருக்கு சோதனை நடத்திட அனுமதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் அனுமதி கிடைத்துள்ள நிலையில் நாளை முதல் அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.
நாளை தொடங்கி 21-ம் தேதி வரை சென்னையில் அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது. சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் மோகன்ராம், கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் உள்ளிட்ட 12 பேருக்கு இந்த சோதனை நடத்தப்பட உள்ளது. இதுவரை மர்மமாக இருக்கும் இந்த கொலை வழக்கின் உண்மைகள் இவர்களிடம் நடத்தப்படும் உண்மை கண்டறியும் சோதனைக்கு பிறகாவது தெரிய வருமா என்று நேரு குடும்பத்தினர் உட்பட அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.