திருச்சி அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக மாஜி பாமக பிரமுகர்கள் இரண்டு பேரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தியுள்ள சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக முதன்மைச் செயலாளரும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், திருச்சி திமுகவின் ‘செயல்’ முகமாக இருந்து வந்தவர். கடந்த 2012-ம் ஆண்டு வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்ற நிலையில் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் ராமஜெயத்தின் உடல் கொடூரமாக தாக்கப்பட்டு முள்கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் திருச்சி- கல்லணை சாலையில் காவிரி ஆற்று படுகையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த கொலை வழக்கை ஶ்ரீரங்கம் போலீஸார் முதலில் நடத்தினர். பின்னர் சிபிசிஐடி, சிபிஐ விசாரணைகளுக்கு மாற்றப்பட்டது. ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு 11 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இன்னமும் ராமஜெயம் கொலை வழக்கில் சிறு முன்னேற்றமும் இல்லை. இந்த வழக்கின் கொலையாளிகள் யார் என்பதே தெரியாத மர்மமாக இருந்து வருகிறது.
இந்த பின்னணியில் நேற்று திடீரென மாஜி பாமக பிரமுகர்கள் எனக் கூறப்படும் பிரபு, உமாநாத் 2 பேரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் விசாரிக்கப்பட்டனர். ராமஜெயம் மர்ம நபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்பட்டார். ராமஜெயத்தை கடத்தி படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட காரை முன்னாள் பாமக பிரமுகர்களாக கூறப்படும் பிரபு, உமாநாத் ஆகியோரும் பயன்படுத்தியது போலீசாருக்கு தெரியவந்தது. அதனாலேயே அவர்களை சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.