திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருபவர் கேரளத்தை சேர்ந்த அஜிதா. இந்த சென்டரில் திருச்சி விபசார தடுப்பு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தருவதற்காகவும் , குண்டாஸ் வழக்குபதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருப்பதற்காகவும் ரூபாய் பத்தாயிரம் லஞ்சமாக தரும்படி விபசார தடுப்பு பிரிவு எஸ்ஐ ரமா
கேட்டுள்ளார். தற்போது பணம் இல்லை 3 ஆயிரம் மட்டும் தருகிறேன் என அஜிதா கூறினார். இதற்கிடையே அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அந்த பணத்தை அஜிதாவிடம் கொடுத்து அனுப்பினர். பணத்தை எஸ்.ஐ. ரமா வாங்கும்போது இன்று கையும் களவுமாக பிடிபட்டார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ரமாவின் டூவீலரை போலீசார் சோதனை செய்தபோது டூவீலரில் ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் எப்படி வந்தது என்று கேட்டபோது அவர் முறையான பதில் சொல்லவில்லை. அந்த பணம் வசூலிக்கப்பட்ட பணம் என்பது தெரியவந்தது. அத்துடன் ரமா மாதந்தோறும், திருச்சியில் உள்ள அனைத்து அழகு நிலையங்களில் இருந்தும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கூகுள் பே மூலம் வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இப்படி வசூலிக்கும் பணத்தை அவர் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கும் பங்கு கொடுத்ததாக கூறி உள்ளார். எனவே அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
ரமா மாதா மாதம் லஞ்சமாகப் பெற்று தனது உயர் அதிகாரிகளுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் எஸ்.ஐ. ரமா உயர் அதிகாரிகள் யார் யாருக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளார் என்ற விபரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.