திருச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்த துணை வேந்தர்கள் மாநாடு தமிழ்நாடு அரசுக்கும், துணை வேந்தர்களுக்கும் நெருக்கடியை உண்டாக்கியது. அதை ஆளுநர் திட்டமிட்டே உருவாக்கினார். இந்த சூழலில் அரசு பல்கலைக்கழக ஆளுநர்கள் அந்த மாநாட்டை புறக்கணித்து உள்ளார்கள்.
இது போன்ற ஆளுநரின் செயல்பாடுகள் ஆளுநரின் பொறுப்புக்கு அழகல்ல.
காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என விசிக வைத்த கோரிக்கை அரசியலுக்காக அல்ல, அது எங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு.விளையாட்டு
பிஜேபி மேல் நமக்கு என்ன காழ்ப்புணர்ச்சி அவர்கள் ஒரு பெரிய அரசியல் கட்சி, தேசிய கட்சி , நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற கட்சி , அவர்களை நாம் காழ்ப்புணர்ச்சி கொண்டு என்ன செய்ய முடியும். ஓவைசி கூறியது அவருடைய பார்வை. தீவிரவாத தாக்குதல் சம்பவம் மதத்தை பார்த்து சுட்டதாக தெரியவில்லை. இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக ஒரு தாக்குதல் நடத்தி கவனத்தை ஈர்த்துள்ளனர்.
காஷ்மீருக்கு பொதுமக்களை அனுப்பினால் இப்படித்தான் தாக்குவோம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். சுற்றுலா பயணிகள் வரக்கூடாது , இந்திய ஒன்றிய அரசை யாரும் நம்ப வேண்டாம் என்பதை உணர்த்துவது தான் பயங்கரவாதிகளின் செய்தி. இதை உள்ளது உள்ளபடி நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வக்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் மே 31 ந்தேதி வி.சி.க சார்பில் திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது.. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், புல்லட் லாரன்ஸ் சக்திஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குருஅன்புச்செல்வம்,தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பிறகு காட்டூரில் நடைபெற்ற பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.