பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, ராகுலை மீண்டும் நடை பயணம் செல்லுமாறு காங்கிரஸ் தலைவர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்று ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணத்தைத் தொடங்கி உள்ளார். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரையில் பங்கேற்குமாறு இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், அசாமில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்கு பிரம்மபுத்திரா ஆற்றில் படகு சவாரி செய்தார். ஜோர்ஹட் பகுதியில் இருந்து மஜூலி நோக்கிச் செல்வதற்காக நிமாடி கட் படித்துறையில் இருந்து ராகுல் காந்தி படகில் பயணம் செய்தார். அப்போது படகு காங்கிரஸ் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.அவர் பயணப்பட்ட இரு கரைகளிலும் ஏராளமான மக்கள் திரண்டிருந்து ராகுல் காந்தியை வரவேற்றனர்.