அதிமுக முன்னாள்அமைச்சர் செல்லூர் ராஜு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுலை புகழ்ந்து ஒரு வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். அதில் நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல் என்று கூறி இருந்தார். அதிமுகவில் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும், தேர்தல் முடிவு வந்ததும் பலர் பல முடிவுகளை எடுப்பார்கள் என்று அரசியலில் பரபரப்புடன் பேசப்பட்டு வரும் நிலையில் செல்லூர் ராஜூவின் பதிவு முக்கியத்துவம் பெற்றது. இவரும் தேர்தல் முடிவுக்காகத்தான் காத்திருக்கிறார். அதன் முன்னோட்டம் தான் இந்த பதவு என கூறப்பட்ட நிலையில், இதை தெளிவுபடுத்திக்கொள்ள அவரிடமே கேட்கப்பட்டது. அப்போது செல்லூர் ராஜூ கூறி்யதாவது:
ஓரு முன்னாள் பிரதமரின் மகன் எளிமையாக ஓட்டலில் போய் மக்களுடன் மக்களாக அமர்ந்து சாப்பிடும் எளிமை எனக்கு பிடித்திருந்தது . அதனால் அந்த வீடியோவை நான் தான் போட்டேன். என்னுடைய அட்மின் போட்டு விட்டார் என நான் சொல்லமாட்டேன். எடப்பாடியார் போல அவரும் எளிமையாக இருக்கிறார் என்பதற்காக பதிவிட்டேன். நல்லது எங்கிருந்தாலும் பாராட்டுவேன். அதிமுகவில் அதிருப்தி என்று ஒன்று இல்லை. நாங்க தான் அதிமுக. அதிமுகவை தொடங்கிய காலத்தில் இருந்தே நான் அதில் இருக்கிறேன். நாங்க தான் அதிமுகவை உருவாக்கிறோம். வேறு எதுவும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.