மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி நேற்று பிற்பகல் மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவர் சுமார் 100 நிமிடங்கள் பேசினார். அவரது பேச்சில் ஆவேசம் தெறித்தது. இந்து, சீக்கியர், கிறிஸ்வத கடவுள்களின் படங்களை காட்டி பல உதாரணங்களை கூறி பேசினார். இதனால் பாஜகவினர் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா உள்பட 5 பேர், மற்றும் பாஜக எம்.பிக்கள் ராகுலை தொடர்ந்து பேசவிடாமல் குறுக்கீடுகள் செய்தனர். ஆனாலும் ராகுல் சோர்ந்து விடவில்லை. தனது கருத்துக்களை பேசி நிறைவு செய்தார். அவர் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு பாராளுமன்றவாதிகளால் மிகவும் பாராட்டப்பட்டது. ராகுல் எதிர்க்கட்சித்லைவர் என்பதை நிரூபித்து விட்டார் என பாராட்டினர்.
இந்த பேச்சு இந்தியா மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் ராகுல் பேச்சின் சில அம்சங்களை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கி விட்டார். இது குறித்து இன்று காலை ராகுலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
என் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது. மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை’ என்றார்.
இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள், ராகுலின் கருத்துக்கள் மட்டும் எப்படி நீக்கப்பட்டது என சபாநாயகரிடம் விளக்கம் கேட்டனர்.இதனால் இன்றும் காலையிலேயே மக்களவை பரபரப்புக்குள்ளானது.