மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம் நேற்றும், இன்றும் விவாதம் நடைபெறுகிறது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று பேசினார். அப்போது அவர். மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசை கடுமையான விமர்சித்து பேசினார்.
மணிப்பூரை பிரதமர் மோடி இரண்டாக பிரித்துள்ளார். இந்தியா நமது மக்களின் குரல். மணிப்பூரில் அந்தக் குரலைக் கொன்றீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றீர்கள். நீங்கள் மணிப்பூர் மக்களை கொன்றீர்கள். இந்தியாவை கொன்றீர்கள். நீங்கள் துரோகிகள். நீங்கள் தேசபக்தர்கள் இல்லை.” என ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.
அவரது இந்த நடவடிக்கைக்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுலை தொடர்ந்து பேசிய ஸ்மிருதி இராணி, “நான் ஒன்றை ஆட்சேபிக்கிறேன். எனக்கு முன் பேச வாய்ப்பளித்தவர் வெளியேறும் முன் அநாகரீகமாக நடந்து கொண்டார். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பாராளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுக்க ஒரு பெண் வெறுப்பு கொண்ட ஆணால் மட்டுமே முடியும். இதுபோன்ற கண்ணியமற்ற நடத்தையை நாடாளுமன்றத்தில் இதற்கு முன் நான் பார்த்ததில்லை. பெண்களைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவரது நடத்தை காட்டுகிறது.” என ராகுல் காந்தியை விமர்சித்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பேசி முடித்து விட்டு, கிளம்பும் முன் ‘Flying kiss’ கொடுத்த ராகுல் காந்தி மீது பாஜக பெண் எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர். ராகுல் காந்தி மீது “தகாத” நடத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தனக்கு flying kiss கொடுத்தார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, பாஜக பெண் எம்.பி.க்கள் கடிதத்தில் கையெழுத்திட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ராகுல்காந்தி அவையில் இருந்து வெளியேறியதை விமர்சிக்கும் வகையில், அவர்கள் ஓடிவிட்டார்கள், நாங்கள் ஓடவில்லை எனவும் ஸ்மிருதி இராணி சாடினார். “
இதனிடையே, ராகுல் காந்தியின் நாடாளுமன்ற பேச்சு வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே காட்டப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. “மணிப்பூர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி 15 நிமிடம் 42 வினாடிகள் பேசினார். இதன்போது, அரசு தொலைக்காட்சியான sansad_tv-யில் சபாநாயகர் ஓம் பிர்லாவை 11 நிமிடம் 08 வினாடிகள் காட்டப்பட்டார். ஆனால், ராகுல் காந்தி வெறும் 4 நிமிடங்களே காட்டப்பட்டார்.” என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.