காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோரா. இவர் மன்மோகன் சிங் அரசில் இணையமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கும் அதே நாளில் (ஜன.14) மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அத்துடன் அவர் ஷிண்டேவில் சிவசேனையில் சேர்ந்தார்.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், “மிலிந்த் தியோரா ஒருகாலத்தில் ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளராக அறியப்பட்டவர். அவரை காங்கிரஸில் இருந்து வெளியேற்றுவதற்கு பாஜக சதி செய்துள்ளது. அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். ஆனால் அவர் வெளியேறுவதற்கான நேரத்தை தீர்மானித்தது பிரதமர் நரேந்திர மோடி.
முக்கியமான நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்கும் அதே நாளில், அதிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக மிலிந்த் தியோரா கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதெல்லாம் வெறும் கேலிக்கூத்து.” என்று கூறினார். மிலிந்த் தியோரா விலகல் குறித்துப் பேசிய மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல், “ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக பாஜகவால் திட்டமிடப்பட்டதே மிலிந்த் தியோராவின் விலகல்.” என்று கூறினார். மேலும் மிலிந்த் தியோரா ஏற்கனவே இரண்டு முறை தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர் என்று கூறினார்.