Skip to content
Home » ராஜ்யசபா தேர்தல்…..தோல்வியடைந்த பாஜக மாஜிக்களுக்கு சீட் கிடைக்குமா?

ராஜ்யசபா தேர்தல்…..தோல்வியடைந்த பாஜக மாஜிக்களுக்கு சீட் கிடைக்குமா?

இந்தியா  முழுவதும் ஒன்பது மாநிலங்களில் இருந்து காலியாக உள்ள 12 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 12 இடங்களில் 11 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம் அதன் முதல் சட்டசபையை இன்னும் பெறாததால், மாநிலங்களவையில் நான்கு இடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 245 என்ற நிலையில் இருந்து 241 ஆக குறைந்துள்ளது.

இந்த தேர்தல் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ​​229 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவைக்கு பாஜகவுக்கு 87 எம்பிக்கள் உள்ளனர்; அதன் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மொத்தம் 105 இடங்கள் உள்ளது. அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஆறு நியமன உறுப்பினர்களையும் சேர்த்தால் பாஜக கூட்டணிக்கு 111 இடங்கள் கிடைத்துவிடும். பெரும்பான்மை எண்ணிக்கையான 115க்கு நான்கு இடங்கள் குறைவாக உள்ளது. அதேநேரம் காங்கிரசுக்கு 26 உறுப்பினர்களும், அதன் கூட்டணி கட்சிகளின் 58 உறுப்பினர்களையும் சேர்த்தால் மொத்தம் 84 இடங்கள் உள்ளன.

யாருக்கும் ஆதரவளிக்காத நிலைபாட்டில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிடம் 11 உறுப்பினர்களும், பிஜேடி கட்சியிடம் 8 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 12 இடங்களுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இருந்து கேரளாவை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜார்ஜ் குரியனும், ராஜஸ்தானில் இருந்து ரவ்னீத் சிங் பிட்டுவும், பீகாரில் இருந்து இந்திய பார் கவுன்சில் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான மனன் குமார் மிஸ்ரா, திரிபுராவில் இருந்து ராஜீப் பட்டாச்சார்யா, அரியானாவில் இருந்து கிரண் சவுத்ரியும், அசாமில் இருந்து மிஷன் ரஞ்சன் தாஸ், ராமேஷ்வர் டெலி, மகாராஷ்டிராவில் இருந்து தைரிஷீல் பாட்டீல், ஒடிசாவில் இருந்து மம்தா மொஹந்தா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் அரியானா காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த கிரண் சவுத்ரி, தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் பாஜகவில் சேர்ந்தார். தற்போது அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கிறது.

மக்களவை தேர்தலில் ஒன்றிய அமைச்சராக இருந்து போட்டியிட்டு தோற்ற ஸ்மிருதி இரானி, வி.முரளிதரன், அஜய் மிஸ்ரா, அர்ஜூன் முண்டா, கைலாஷ் சவுத்ரி, ராஜீவ் சந்திர சேகர், மகேந்திர நாத் பாண்டே, ராவ் சாகேப் தன்வே, நிஷித் பிரமானிக் ஆகிய 9 பேரில் சிலருக்கு, மாநிலங்களவையில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவருக்கும் மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. 12 இடங்களுக்கான வேட்பாளர்களில் 9 வேட்பாளர்களே அறிவிக்கப்பட்ட நிலையில், 2வது பட்டியிலில் மேற்கண்ட மாஜிக்களின் பெயர்கள் இடம்பெறுமா? என்பது கேள்வியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!