மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்தச் சூழலில் தனது தந்தை ராஜீவ்காந்தியுடன் தான் இருக்கும் பால்ய கால புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். “அப்பா… உங்களது கனவுகள், எனது கனவுகள். உங்களின் ஆசைகள், எனது பொறுப்புகள். உங்களது நினைவுகள் எனது நெஞ்சுக்குள் என்றென்றும் இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 1984-ம் ஆண்டு ஆண்டு பிரதமராக ராஜீவ்காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தாயார் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு பிரதமரானார். நாட்டின் இளம் பிரதமர் என அறியப்பட்டவர். 1989 வரையில் பிரதமர் பொறுப்பில் இருந்தார். கடந்த 1991-ல் மே 21-ம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு தனது அஞ்சலியை சமூக வலைதள பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.