சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இள வயது உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு ரூ.11 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. குகேஷுக்கு தமிழகம், இந்தியா தொடங்கி உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு குகேஷுக்கு போனில் தனது பாராட்டினை ரஜினி தெரிவித்தார். அவர் சென்னை திரும்பியவுடன் பல்வேறு
பிரபலங்கள் அவரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
இன்று காலை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். ரஜினியுடனான சந்திப்பு குறித்து குகேஷ், “நன்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார். உங்கள் அன்பான வாழ்த்துகளுக்காகவும், நேரில் அழைத்து நேரம் செலவழித்து உங்களுடைய ஞானத்தை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டமைக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். ரஜினியுடனான சந்திப்பின் போது குகேஷின் பெற்றோரும் உடனிருந்தனர்