தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், புதிய அமைச்சராக பதவியேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினி , மநீம தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டிவிட்டரில், “தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டரில், “வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.