சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. வெளியூரில் இருந்ததால் ரஜினி கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், சசிகலாவின் போயஸ்கார்ட்டன் வீட்டிற்கு நேற்று மாலை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் வந்தார். வீட்டை சுற்றிப்பார்த்த அவர்கள் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக சசிகலாவுடன் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் தனது வீட்டிற்கு கிளம்பிய நடிகர் ரஜினியிடம் ஜெயலலிதாவின் இடத்தை யார் நிரப்புவார் என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், அரசியல் பேச விரும்பவில்லை’ என கூறிவிட்டு புறப்பட்டார்..