இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்பெற்ற ஜெயிலராக நடித்துள்ளார். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ‘ஜெய் பீம்’ இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். ரஜினியின் 170வது படமாக உருவாகும் இந்த படத்தை லைக்கா தயாரிக்கவுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.
இப்படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜூன், விக்ரம் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்திற்கு இணையான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியில் 1991-ம் ஆண்டு வெளியான ‘ஹும்’ (HUM) படத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் இதுதான். அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.