தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறைண்டனை, ₹20,500 அபராதமும், புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதற்கான குற்றச்சாட்டில் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு ₹500 அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து இருவரும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னாள் சிறப்பு டிஜிபி, இந்த வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், மார்ச் மாதத்திற்குள் மேல்முறையீட்டு வழக்கை முடித்திட உத்தரவிட்டனர்.இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகவில்லை.