அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி
தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சுற்றுலாத்துறை – மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடித் திருவாதிரை விழா – 2024 தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவித்ததாவது,
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக புகழ் பெற்ற அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிறுவிய மாமன்னர் இராஜேந்திர சோழன் ஆவார். அரியலூர் மாவட்டம் முதல் பெரம்பலூர் மாவட்டம் வரை நகரங்கள், கிராமங்களை உருவாக்கிய மாமன்னர் மற்றும் இந்தியாவை தாண்டி அயல் நாடுகளையும் வென்று தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திய மாமன்னர் இராஜேந்திர சோழன் ஆவார். மாமன்னர் இராஜராஜசோழனின் மகனான மாமன்னர் இராஜேந்திர சோழன் பல்வேறு நாடுகளை வென்று மிகவும் சிறப்புடன் ஆட்சி செய்தவர்.
இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வெகு விமர்சையாக வருகின்ற 02.08.2024 அன்று கொண்டாடப்படவுள்ளது. அதன் அடிப்படையில் ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துறை சார்ந்து ஒதுக்கப்பட்டுள்ள விழாத் தொடர்பாக பல்வேறு பணிகளை சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மாவட்ட நிலை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை அனைவருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.