ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூசிங். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் செம்மறி ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆட்டின் வயிற்று பகுதியில் உருது வாசகம் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், அந்த கிராமத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்தார். அப்போது செம்மறி ஆட்டின் உடலில் 786 என்ற எண்கள் காணப்பட்டது தெரிய வந்தது. இந்த 786 என்ற எண்கள் இஸ்லாமிய மதத்தில் புனிதம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இதனால் அந்த செம்மறி ஆட்டை விற்பதற்கு ராஜூசிங் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
செம்மறி ஆட்டின் உடலில் என்ன வாசகம் இடம்பெற்றிருந்தது என எனக்கு தெரியாது. இதுபற்றி இஸ்லாமிய சமூக உறுப்பினர்கள் சிலருடன் ஆலோசித்த போதுதான், அது 786 என்ற எண் என கூறினர். பக்ரீத்தையொட்டி இந்த செம்மறி ஆட்டை அதிக விலை கொடுத்து வாங்க சிலர் முன்வந்தனர். ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூட கொடுத்தும் வாங்குவதற்கு முன்வந்தனர். ஆனால் அதனை விற்க நான் தயாராக இல்லை. ஏனென்றால் அந்த ஆடு என்னிடம் மிகவும் அன்பாக உள்ளது என்றார். ரூ.1 கோடி வரை ஏலம் போன அந்த செம்மறி ஆட்டுக்கு தற்போது சிறப்பு கவனிப்பு வழங்கப்படுகிறது. தினமும் மாதுளை, பப்பாளி, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் கொடுக்கப்படுகிறது.