ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறித்தது. விரைவில் அங்கு பாஜக முதல்வர் பதவி ஏற்க உள்ளார். ஏற்கனவே ராஜஸ்தானில் 2 முறை பாஜக முதல்வராக பதவி வகித்தவர் வசுந்தரா ராஜே சிந்தியா. தற்போது 3 முறையும் அவர் முதல்வர் ஆகலாம் என்ற ஆசையில் உள்ளார். இம்முறையும் அவர் தேர்தலில் வெற்றியும் பெற்று உள்ளார். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வசுந்தரா ராஜே சிந்தியாவை முதல்வர் ஆக்க விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.
எனவே பாபா பாலக் நாத் யோகி என்ற மடாதிபதியை முதல்வராக்கலாம் என அவர் காய் நகர்த்தி வருகிறார். இவரும் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகி உள்ளார். உபி யோகி ஆதித்யநாத் போல இங்கும் ஒரு யோகியை கொண்டு வரலாம். அப்படி யோகியை கொண்டு வந்தால், சிந்தியா எதிர்க்கமாட்டார் என அமித்ஷா கருதுகிறார்.
இது தவிர மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தியாகுமாரி, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரும் முதல்வர் பதவிக்கான ரேசில் உள்ளனர். யாரை முதல்வராக்குவது என்ற குழப்பத்தில் பாஜக மேலிடம் உள்ளது. வசுந்தராவுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்றால் அவர் எதிர்வினையாற்றுவார் என்ற நிலையும் அங்கு காணப்படுகிறது.