தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மாமன்னர் ராஜராஜசோழனின் சதய விழா கொண்டாடப்படுகிறது. சதய விழா அரசு விழாவாக நடந்து வருகிறது. இவ்விழா இந்தாண்டு இன்றும், நாளையும் நடக்கிறது.
இதுகுறித்து சதய விழா குழு தலைவர் து.செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்நாளான சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது., 9 மணியளவில் திருமுறை அரங்கமும், பெருவுடையார் மற்றும் பெரியநாயகிக்கு அனைத்து வகை அபிஷேகங்களும் மற்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சதயவிழா குழு தலைவர் து.செல்வம் வரவேற்புரையாற்றுகிறார். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகிக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தொடக்க உரையாற்றுகிறார். அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, மாவட்ட எஸ்.பி, ஆஷிஷ்ராவத், தென்னகப்பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், முன்னாள் நகராட்சித் தலைவர் இறைவன், பேராசிரியர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பழனி ஆதீனம் குருமகாசன்னிதானம் சீர்வளர்சீர் சாது சண்முக அடிகளார் ஆன்மீக உரையாற்றுகிறார். மதியம் திருவையாறு இசைக்கல்லூரி மாணவர்களின் நாதஸ்வரமும், முத்ரா நாட்டிய கலாலயம் மற்றும் தீப வர்ஷனா இசை களஞ்சியம் குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு வில்லுப்பாட்டு உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன,
2ம் நாளான நாளை காலை 6.30 மணியளவில் மங்கள இசை, 7 மணிக்கு திருக்கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கல், 7.20 மணிக்கு மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், 8 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவா மூர்த்திகளின் திருமுறை பண்ணுடன் ராஜ வீதிகளில் வீதியுலா, பெருவுடையார், பெரிய நாயகி அம்மனுக்கு பேராபிஷேகம், மதியம் மகாதீபாராதனை ஆகியவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. இரவு விருது வழங்கும் விழா நடக்கிறது. விழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, துணைத் தலைவர் மேத்தா, செயல் அலுவலர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.