Skip to content
Home » மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி…..கலெக்டர் தொடங்கி வைத்தார்

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி…..கலெக்டர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு  பிரசார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தினை,  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  கொடியசைத்து துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது.

அப்போது கலெக்டர் அருணா கூறியதாவது;

மழைக்காலத்திற்கு முன்னதாகவே மழை நீரினை சேகரிப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி இன்றைய தினம், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பிரச்சார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன வீடியோ வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மழைத்துளி அது நம் உயிர்த்துளி, வான் தரும் மழை அதை வீணாக்குவது நம் பிழை, மழையால் ஆவது உலகு அதற்கு மரம் வைத்து பழகு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பணியாளர்கள்  உள்ளிட்டோர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புதுக்கோட்டை கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பிரசார பேரணி சென்றடைந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், பொதுமக்கள் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி முறையாக பராமரிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைத்து மழைநீரை சேகரித்து தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். நீர்வளத்தினை மேம்படுத்திட பெருகி வரும் மழைநீரை சேகரிக்க வேண்டும்.

நீரின் பயன்பாட்டிற்கும் நீரின் செறிவூட்டலுக்கும் இடையே உள்ள இடைவெளியை களைய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவிட வேண்டும். வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வீட்டு கூரையை மழைக்காலத்திற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும். காய்ந்த இலை சருகுகளை அப்புறப்படுத்த வேண்டும். மழைநீர் கொண்டுவரும் குழாய்களில் ஏற்படக் கூடிய அடைப்புகளை நீக்கி பழுதுகளை சரிசெய்திட வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் மூலம் வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி மழைநீரினை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, உதவி நிர்வாகப் பொறியாளர்கள் .வி.ராஜகோபால், கே.கருப்பையா, கே.ஜெயச்சந்திரன், ஆர்.சண்முகநாதன், துணை நீர்நிலை வல்லுனர் .சி.தர்மலிங்கம், உதவிப் பொறியாளர்கள் கே.சண்முகம், கே.பவித்ரா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!