Skip to content
Home » பருவமழை தகவல்கள் ……TN-Alert கைப்பேசி செயலி மூலம் அறியலாம்

பருவமழை தகவல்கள் ……TN-Alert கைப்பேசி செயலி மூலம் அறியலாம்

மழை பேரிடரை முன்கூட்டியே அறிய TN-Alert செயலியை பயன்படுத்த அரியலூர் கலெக்டர் தகவல்…

வடகிழக்கு பருவ மழை தொடர்பான தகவல்களை TN-Alert என்கிற
கைப்பேசி செயலி (Mobile Application) வாயிலாக முன்கூட்டியே தெரிந்து,
பொதுமக்கள் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் – மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தகவல்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு TN-Alert என்ற கைப்பேசி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலியில் நம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியாக தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்துக்கு உட்பட்டதா என்பது போன்ற தகவல்களை அறியும் வசதி உள்ளது.

பேரிடர் மற்றும் கனமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் மக்கள், தங்கள் புகார்களை பதிவு செய்யவும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேரிடர் குறித்த வானிலை முன்னெச்சரிக்கையை அறிந்து கொண்டு அதற்கேற்ப பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கையை மேற்கொள்ள உதவும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் (IOS App Store) இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 என்ற தொலைப்பேசி எண்ணிற்கும் மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கும். வாட்ஸ்அப் மூலம் 9384056231 என்ற எண்ணிற்கும் பேரிடர் தொடர்பான தகவல் / புகார்களை தெரிவிக்கலாம்.

பேரிடர் காலத்தில் எச்சரிக்கை நிலவரங்கள் குறித்து அறிய மிகவும் பயனுள்ளதாக உள்ள TN-Alert கைப்பேசி செயலியினை பொதுமக்கள் அனைவரும் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், முன்கள பணியாளர்கள், அரசுசாரா அமைப்பினர் (NGOs) அனைவரும் பதிவிறக்கம் செய்திட வேண்டும் எனவும், இந்த செயலி நிறுவப்பட்டால் செல்போன் Switch off ஆகி உள்ள நிலையிலும் பேரிடர் காலத்தில் சப்தம் எழுப்பி எச்சரிக்கை எழுப்பும் வண்ணம் உருவாக்கப்பட்டு உள்ளது மேலும் அந்த எச்சரிக்கை செய்தியினை படித்தால் மட்டுமே அதன் எச்சரிக்கை ஒலி அளவு குறையும் வகையில் உள்ளதால் பொதுமக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றது.

எனவே, அனைவரும் தங்களது கைப்பேசிகளில் TN-Alert என்கிற கைப்பேசி செயலியினை பதிவிறக்கம் செய்து வடகிழக்கு பருவ மழை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிந்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம், என  அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!