தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் 13ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 97 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக மழை நீர், நெல் சாகுபடி வயல்களில் தேங்கியது. திருவையாறு கிழக்கு, மேற்கு விளாங்குடி, புனவாசல், குழிமாத்தூர் ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் நெல் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் மூலம் தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள வயல்களை தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் ஈஸ்வர் நேரடி கள ஆய்வு செய்தார். விவசாயிகள் தெரிவித்த தகவலின் படி, கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றுக்கு இடைப்பட்ட கிராமங்களில் பெய்துள்ள மழை நீர் தற்போது வடிந்து வருகிறது. அதிகப் பட்ச மழையின் காரணமாக நெல் வயல்களிலும் மழைநீர் தேங்கி வடிந்து வருகிறது. எந்த இடத்திலும் வடிகால் பிரச்சனை இல்லை. ஆனால் நீரில் மூழ்கியுள்ள காரணத்தினால் நெற் பயிருக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். எனவே மழை நீர் வடிந்த பின்னர் வருவாய்த்துறை, வேளாண்மை துறை இணைந்து உரிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, பயிர் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கிட பரிந்துரைகள் செய்யப்படும் என தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்தார். கள ஆய்விற்கான ஏற்பாடுகளை திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, அலுவலர்கள் சினேகா வெங்கடேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.