தஞ்சை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியும் மிக முக்கிய தொழிலாக உள்ளது. தஞ்சை கடற்பகுதியான அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளங்கள் உள்ளன. இங்கு ரசாயன உப்பு, உணவு உப்பு என 2 விதமான உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் பாத்தி சீரமைத்தல், வரப்பு அமைத்தல். கடல் வாய்க்கால் சீரமைத்தல் போன்ற பணிகள் நடந்தன. இதையடுத்து மார்ச் மாதம் உப்பு உற்பத்தி தொடங்கியது. இங்கு உற்பத்தி செய்யும் உணவு உப்பு மற்றும் ரசாயன உப்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, சென்னை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள உப்பு ஆலைகளில் மேன்மைப்படுத்தப்பட்டு அங்கிருந்து பிற தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த ரசாயன உப்பு உரம் தயாரிக்கவும். சோப்பு, சோடா, பானம், வீடு சுத்தம் செய்யும் ஆசிட் தயாரிக்க
பயன்படுத்தப்படுவதால் அந்தந்த தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் கடற்பகுதியில் விட்டுவிட்டு பெய்த கோடை மழையினால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் வாரப்பட்ட உப்புகள் பாத்திகளில் மழைநீரில் கரைந்து வீணாகி வருகிறது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உப்பு உற்பத்தியாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். தற்போது 500 ஏக்கருக்கு குறைந்த அளவு பரப்பில் பகுதிகளில் மட்டுமே உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது