திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தலையாமங்கலம் பாலு இல்லத்திருமணம் இன்று மன்னார்குடியில் நடந்தது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த ஆண்டு சம்பா அறுவடை சமயத்தில் திடீரென பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமானது. உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்ய உத்தரவிட்டேன். தேர்தல் பணியில் சில அமைச்சர்கள் இருந்தாலும், அதிகாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குசென்று கணக்கெடுத்து சேதம் குறித்து அறிக்கை அளித்தார்கள். அந்த அறிக்கை அனைத்தும் டேட்டா என்ட்ரி செய்யும் பணி நடக்கிறது.
இன்னும் ஒருவாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிறார்.85சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இன்னும் 15% வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. காரணம் நீங்கள் கஜானாவை காலியாக்கி விட்டு, தமிழக அரசை கடனாளியாக்கி விட்டு சென்றதால்தான் இந்த நிலை.
ஆனாலும் மிச்சமுள்ள 15 சதவீத வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவேன்.அந்த நம்பிக்கையோடு இருங்கள். அதற்காக 5ஆண்டுகள் காத்திருக்கத்தேவையில்லை. அந்த நம்பிக்கையோடு இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மணவிழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், எம்.பிக்கள் டிஆர் பாலு, செல்வராஜ், எம்.எல்.ஏக்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக தலையாமங்கலம் பாலு, முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.