தமிழகத்தில் கோடை வெயில் மற்றும் வெப்ப அலையின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. அதிலும் வட உள் மாவட்டங்களில் வெப்ப அலையால், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சில இடங்களில் வெயிலில் சுருண்டு விழுந்து முதியவர்கள் இறந்த சோக நிகழ்வுகளும் நடந்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க வெயிலுக்கு இதமாக, கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆலந்தூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், அசோக் நகர், அடையாறு, மயிலாப்பூர், வடபழனி, தாம்பரம்,வண்ணாரப்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இதுபோல விழுப்புரம், செஞ்சி, அவலூர்பேட்டை, விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் இன்று காலை பலத்த மழை கொட்டியது. அவலூர் பேட்டையில் காலை 6 மணி முதல் பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. இதனால் அந்த சுற்றுவட்டாரங்களில் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது.
இதுபோல திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று காற்றுடன் மழை கொட்டியதால் வாழைகள் சாய்ந்தன. திருப்பத்தூர், வாணியம்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் மக்ள் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.