தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 6 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழுவு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் முடங்கி உள்ளனர்.
அதே நேரத்தில் நேற்று டெல்டா மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இன்று காலையில் மழை ஓய்ந்திருந்தது. அதே நேரத்தில் வானம் எந்த நேரத்தில் மழை கொட்டலாம் என்ற நிலையில் கருமேக கூட்டங்களால் நிரம்பி காணப்பட்டது. ஆனாலும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கியது. மற்ற மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.