வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்வதால் அந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதுபோல கடலூர், திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பரவலாக இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
அடைமழை காலம் போல வானம் மேகமூட்டத்துடன் கும்மிருட்டாக காணப்படுகிறது. தொடர்ந்து சாரல்மழை போல பெய்து வருகிறது. இதனால் இன்று காலை பணிக்கு சென்றவர்களும், கல்வி நிலையங்களுக்கு சென்றவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த நிலையில் மழை காரணமாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.