வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, விருதுநகர், மதுரை, திருப்பத்தூர், தேனி ஆகிய 20 மாவட்டங்கள் மற்றும்மற்றும் புதுச்சேரி, காரைக்கால பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சியில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. இரவில் விடிய விடிய கனமழை கொட்டியது. இன்று அதிகாலை 2 .30 மணி அளவில் திருச்சி மாவட்ட புறநகர் பகுதியான முசிறி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. காலை 7 மணிக்கும் லேசான மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளிக்கிறது.
இதுபோல தஞ்சை நகரில் இன்று காலை 9 மணி அளவில் கனமழை கொட்டியது, புறநகர் பகுதிகளான ஆலத்தூர், கல்விராயன்பேட்டை பூதலூர், காமாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வப்போது லேசான மழை பெய்தது. நேற்று இரவு முதல் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்வதால் மேற்கண்ட இரு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.