அரியலூர் மாவட்டத்தில் , செந்துறை, ஜெயங்கொண்டம் , திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கோடை மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே திடீர் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
தற்பொழுது வங்க கடலில் நிலவும் மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக நேற்று அரியலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே உள்ள ஓடைகளிலும் காட்டு ஓடைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கோடைகாலத்தில் பெய்த கனமழையால் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். முந்திரி காட்டு ஓடைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் அப்பகுதி சிறுவர்கள் துள்ளி குதித்து விளையாடி மகிழ்ந்தனர். அரியலூர் மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதாலும் ஏரி குளம் குட்டைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதாலும் குடிநீர் பஞ்சம் நீங்கும் என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.