சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக பல பகுதிகளில் 2 செ.மீ முதல் 12 செ.மீ. வரை மழை பதிவாகி உள்ளது. இதில், சென்னை புறநகர்ப் பகுதியான சோழிங்கநல்லூரில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று காலை வரை அதிகபட்சமாக 12 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. அடையாறில் 10 செ.மீ, திருவொற்றியூரில் 9 செ.மீ., கொளத்தூரில் 8 செ.மீ மழை பெய்துள்ளது.
கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் 6, 7-ம் தேதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 8, 9, 10-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
திருச்சி மாவட்டத்திலும் பரவலாக நேற்று இரவு லேசான மழை பெய்தது. குறிப்பாக திருச்சி மாநகரில் நேற்று நள்ளிரவு பலத்த மழை கொட்டியது. இதனால் மின்சாரமும் தடைபட்டது. முசிறி அதன் சுற்றுவட்டாரங்களிலு் மழை பெய்தது.