தென்னக ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடந்தது. எஸ்.ஆர். எம்.யூ, டி.ஆர்.இ.யூ., எஸ்.ஆர்.இ.எஸ். உள்பட 5 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு என அனைத்து கோட்ட தலைநகரங்களிலும், பொன்மலை ரயில்வே பணிமனையிலும், ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் இதற்கான வாக்குப்பதிவு நடந்தது. பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று அனைத்து கோட்ட தலைநகரங்களிலும் நடந்தது. திருச்சியில் ஜங்ஷன் ரயில்வே திருமண மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. மொத்தம் உள்ள 76 ஆயிரம் வாக்காளர்களில் 88% பேர் வாக்களித்தனர். இதில் 30 சதவீதம் வாக்குகள் பெற்ற தொழிற்சங்கம் மட்டும் தான் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும். 15 % வாக்குகள் பெற்றால் கேட் மீட்டிங் நடத்தவும், அங்கு தொழிற்சங்க போர்டு வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படும்.
இறுதியில் எஸ்.ஆர்.எம்.யூ. , டி. ஆர்.இ.யூ ஆகிய 2 தொழிற்சங்கங்கள் 30 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்றுள்ள நிலையில் அவை ரயில்வேயில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாகியுள்ளன. எஸ்.ஆர்.எம்.யூ-38.5 சதவீத வாக்குகளையும், டி.ஆர்.இ.யூ -38.34 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். எஸ்.ஆர்.இ.எஸ்- 18.48 சதவீத வாக்குகளையும் பெற்று 3ம் இடத்தை பெற்றது.