ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) 43 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகார தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரயில்வே அலுவலகங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்பு பகுதிகளில், தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதுபோல, அவர்களது தேர்தல் வாக்குறுதிகளையும் கூறி ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலர் கண்ணையா கூறியதாவது: ரயில்வேயில் 80 சதவீத ஊழியர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. ரயில்வே ஊழியர்களுக்கு நாங்கள் பல்வேறு சலுகைகளை பெற்று தந்துள்ளோம். தற்போதுள்ள தொழிற்சங்கங்களின் தவறுகளையும், ரயில்வேயின் தவறான கொள்கைகளையும் சுட்டிக்காட்டி, ஊழியர்களின் ஆதரவை திரட்டி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தெற்கு ரயில்வேயில் அங்கீகாரத் தேர்தலில் போட்டியிடும் ரயில்வே தொழிங்சங்கங்களின் இறுதிப்பட்டியலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், தட்ஷிண ரயில்வே ஊழியர்கள் சங்கம், தட்ஷிண ரயில்வே கார்மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கீகாரத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தொழிற்சங்கங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 76 ஆயிரம் தொழிலாளர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.