ராமேஸ்வரத்திலிருந்து நேற்று இரவு சென்னை நோக்கி சென்ற அதிவிரைவு ரயிலில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்கிற டிக்கெட் பரிசோதகர் பணியில் இருந்துள்ளார். அந்த ரயில் விருத்தாசலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்றபோது டிக்கெட் பரிசோதகருக்கும், பயணி ஒருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த பயணி தன்னை தாக்கிவிட்டதாகவும், அவர் போதையில் இருந்ததாகவும் டிக்கெட் பரிசோதகர் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் ரயில் விழுப்புரம் சென்றதும், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த பயணியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்தவர் என தெரியவந்ததாம்.
சம்பவம் நடந்த பகுதி திருச்சி ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால் டிக்கெட் பரிசோதகர் மற்றும் தாக்கிய இருவரையும் போலீசார் அடுத்த ரயிலில் திருச்சி அழைத்து வந்தனர். அவர்களிடம் திருச்சி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி பயணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.