Skip to content

பெரம்பலூரில் ரயில் பாதை அமைக்க வேண்டும், மக்களவையில் அருண் நேரு பேச்சு

  • by Authour

பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி. மக்களவையில் பேசியதாவது:

தமிழ்நாட்டில் எனது தொகுதியான பெரம்பலூர் வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த  தொகுதியில் ரயில் பாதையின் தேவை குறித்து பலமுறை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியானது தமிழ்நாட்டில் ரயில்வே மண்டலம் அல்லாத ஒரு பகுதியாகும். தமிழ்நாட்டில் உள்ள இதர அனைத்து பிராந்தியங்கள் ஒவ்வொன்றும் 40 கிலோமீட்டர் சுற்றளவில் ரயில் பாதையை கொண்டுள்ளன.

ஆனால், பெரம்பலூர் தொகுதியில் தோராயமாக 160 கிலோமீட்டர் சுற்றளவில் ரயில் பாதை இணைப்பு இல்லை. இது அமைக்கப்பட்டால் இரண்டு வழிகளில் தேசத்தின் வளர்ச்சிக்கு உதவும். அதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தோல் அல்லாத காலணி தொழிற்சாலை எறையூரில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் 50 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இரண்டாவதாக, நாட்டில் மிகப்பெரிய அளவிலான மக்காச்சோளம் உற்பத்தி பெரம்பலூர் முதல் நாமக்கல் வரையிலான பகுதியில் நடைபெறுகிறது. இது சுமார் ஐந்து லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இவற்றை இணைக்கும் வகையில் ரயில்வே வழித்தடம் அமைக்கப்பட்டால் மக்கள் தொழிற்சாலைக்குச் வந்து செல்லவும், விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும் எளிதாக இருக்கும். அதன்மூலம், தேசிய வளர்ச்சிக்கான பங்களிப்பை அதிகரிக்கவும் உதவும். ஆகவே, பெரம்பலூர் தொகுதியில் பிரத்யேக ரயில்வே வழித்தடம் அமைக்க ரயில்வே அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!