திருச்சி கோட்டை, சூப்பர் பஜார் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில், நேற்று (திங்கள்கிழமை) காலை குப்பைகளை சேகரிக்கச் சென்றபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் சாக்கில் சுருட்டிய மர்ம பொருள் கிடந்துள்ளது. அதை தூய்மை தொழிலாளர்கள் பிரித்துப் பார்த்தபோது உள்ளே மூதாட்டி ஒருவரின் உடல் இருந்தது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சடலமாக கிடந்தவர் திருச்சி அடுத்த திருவாசியைச் சேர்ந்த கல்யாணி (72) என தெரியவந்தது. அதன் பேரில் கல்யாணியின் உறவினர்களை அழைத்து விசாரணை செய்தனர். அதில் சடலமாக கிடந்தவர் கல்யாணிதான் என உறுதியானது. இதனையடுத்து உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.. தொடர்ந்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
முதல் கட்ட விசாரணையில், மூதாட்டி கல்யாணி குடும்ப ஓய்வூதியத் தொகை வந்ததும் அதை எடுத்துக்கொண்டு, கோட்டை பகுதிக்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கமாம். அந்த வகையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை திருச்சி வந்தவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது மகன் வனத்தான் (வாளாடி ரயில் நிலைய ஊழியர்) மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். கோட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் கோட்டை பகுதிக்கு வந்த மூதாட்டி மர்ம நபர்களிடம் சிக்கியுள்ளார். அவரிடமிருந்த தொகை, அணிந்திருந்த தோடு, மூக்குத்தி உள்ளிட்டவைகளையும் காணவில்லை. எனவே பணம், நகைக்காக மர்ம நபர்கள் மூதாட்டியை கொன்று சாக்குப் பையில் வைத்து சுருட்டி குப்பைத் தொட்டியில் வீசியிருக்கலாம் என போலீசார் கருதி விசாரணையை முடுக்கி விட்டனர்.
சூப்பர் பஜார் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அப்பகுதியில் உள்ள பிரபலமான ரெடிமேட் ஜவுளி கடை ஒன்றில் பணி புரியும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் காசன் (54) என்பவர் மூதாட்டியை கொலை செய்து அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க தோடுகளை திருடிச் சென்றதும்,மூதாட்டியை அடித்துக்கொன்று அவரது உடலை அங்கிருந்த வெள்ளை சாக்குப்பையில் போட்டு கட்டி குப்பை கிடக்கில் வீசியதும் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து குற்றவாளி அப்துல் கசனை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் நகைக்காக மூதாட்டியை கொன்று சாக்கு பையில் கட்டி குப்பைத்தொட்டியில் வீசியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.