கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு நேற்று இரவு 9.05 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இதில் டி-1 பெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் இருந்தனர். இந்த ரெயில் நள்ளிரவில் கோழிக்கோடு நகரை தாண்டி சென்றது. எலத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கோரப்புழா பாலத்தில் சென்றபோது, அந்தப் பெட்டியில் இருந்த ஒரு வாலிபருக்கும் மற்ற பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர், தான் கையில் வைத்திருந்த 2 பாட்டில்களில் இருந்த திரவத்தை தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள் மீது திடீரென ஊற்றினார். பின்னர் அவர் நெருப்பையும் பற்ற வைத்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பயணிகளின் மீது தீப்பிடித்ததால் அவர்கள் தீக்காயத்துடன் அலறினர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தீயினால் புகை மண்டலமும் உருவாக யார் எங்கு இருக்கிறார்கள்? என்றே தெரியவில்லை. இந்த நிலையில் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் ரெயில் நின்றது. இதனை பயன்படுத்தி தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் தப்பி ஓடி விட்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே அதிகாரிகளும் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பிரின்ஸ், பேபி மெமோரியல், தலச்சேரி அனில்குமார், அவரது மனைவி சஜிஷா, மகன் அத்வைத் உள்ளிட்ட 9 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் அந்த பெட்டியில் பயணம் செய்த குழந்தை உள்பட 3 பேர் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. அவர்களை தேடியபோது ரெயில் தண்டவாளத்தில் 3 பேரும் தீக்காயங்களுடன் பிணமாக கிடப்பது தெரியவந்தது.
அவர்கள் மீது தான் தீ வைக்கப்பட்டதா? அல்லது தீ விபத்தின்போது, ரெயிலில் இருந்து குதித்ததில் இறந்திருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தது மாட்டனூரைச் சேர்ந்த வாசி ரகுமத், அவரது சகோதரி மகள் சஹாரா (வயது 2) மற்றும் சவுபீக் என தெரிய வந்துள்ளது. பயணிகள் தீ வைத்த நபர், சிவப்பு தொப்பி மற்றும் சட்டை அணிந்திருந்ததாகவும் அவர் வைத்திருந்த 2 பாட்டில்களில் மண் எண்ணெய் அல்லது பெட்ரோல் வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அவர் திட்டமிட்டு வந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவருக்கு மாவோயிஸ்டு இயக்கத்தினருடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. ரெயில் நிலைய தண்டவாளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பேக் கிடந்ததை பார்த்த போலீசார் அதனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பையில் ஒரு டிபன் பாக்ஸ் இருந்தது. அந்த பையை தீ வைத்த வாலிபர் விட்டுச்சென்று இருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்திற்குரிய நபர், ரெயிலில் இருந்து இறங்கி செல்வது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் என்.ஐ.ஏ விசாரணை நடத்த உள்ளது. சிவப்பு சட்டை மற்றும் தொப்பி அணிந்த நபர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவரின் தொலைபேசி மற்றும் இந்தியில் எழுதப்பட்ட சில புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள டிஜிபி அனில் காந்த் சம்பவம் நடந்த எலத்தூர் பகுதிக்கு விரைகிறார். இந்த வழக்கை என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.