கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு நேற்று இரவு 9.05 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது நள்ளிரவில் கோழிக்கோடு நகரை தாண்டி சென்றது. எலத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கோரப்புழா பாலத்தில் சென்றபோது, ஒரு முன்பதிவு பெட்டியில் இருந்த ஒரு வாலிபருக்கும் மற்ற பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர், தான் கையில் வைத்திருந்த 2 பாட்டில்களில் இருந்த திரவத்தை தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள் மீது திடீரென ஊற்றினார். பின்னர் அவர் நெருப்பையும் பற்ற வைத்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பயணிகளின் மீது தீப்பிடித்ததால் அவர்கள் தீக்காயத்துடன் அலறினர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தீயினால் புகை மண்டலமும் உருவாக யார் எங்கு இருக்கிறார்கள்? என்றே தெரியவில்லை. இந்த நிலையில் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் ரெயில் நின்றது. இதனை பயன்படுத்தி தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் தப்பி ஓடி விட்டார். அவர் ரயிலில் இருந்து இறங்கியதும் ஒரு டூவீலரில் ஏறி தப்பி சென்று உள்ளார். எனவே அவர் திட்டமிட்டு இந்த ரயிலில் வந்து வன்முறையில் ஈடுபட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த பயங்கர சம்பவத்தின் பின்னணியில் பெரிய கும்பல் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் வழக்கு விசாரணைக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3பேரை எரித்து கொன்ற நபர் எப்படி இருந்தார் என சக பயணிகளை கூறியதை வைத்து அவரது உருவப்படத்தை போலீசார் தயாரித்து வெளியிட்டுள்ளனர். இவரைப்பற்றிய தகவல் தெரிந்தவர்கள் போலீசுக்கு தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.