திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்திருந்த வர்கள் விழா உற்சாகத்தில் மது அருந்தினர். காவடி ஊர்வலத்தில் வந்த களைப்பு மற்றும் போதை காரணமாக 20க்கும் மேற்பட்டவர்கள் கோயில் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தனர். போதை அதிகமாக இருந்ததால் அவர்கள் ஆழ்ந்து தூங்கி விட்டனர். அதிகாலையில் இந்த வழியாக ரயில் வரும் என ஊர்பெரியவர்கள் கூறி உள்ளனர். ஆனால் அதை கேட்காமல் இவர்கள் படுத்தனர்.
அதிகாலை 3 மணியளவில் அந்த வழித்தடத்தில் தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. தண்டவாளத்தில் பலர் படுத்து தூங்குவதை ரயில்வே இன்ஜின் டிரைவர் கவனித்து விட்டார். இதனால் அவர் ரயிலின் வேகத்தை குறைத்ததுடன், ஒலி எழுப்பினார். அப்போது தண்டவாளத்தில் படுத்திருந்தவர்கள் எழுந்து விட்டனர். சிலர் எழுந்து தண்டவாளத்தை விட்டு சற்று தொலைவில் போய் நிலைதடுமாறி சாய்ந்தனர். இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்த முயன்றார், ஆனாலும் முடியவில்லை.
எவ்வளவு ஒலி எழுப்பியும் எழும்பாமல் படுத்திருந்த முத்துப்பேட்டை உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகதாஸ் மகன் அருண் (வயது 17), கோபாலசமுத்திரம் கந்தசாமி மகன் பரத்குமார் (17), நாகை மாவட்டம், மேலமருதூர் தெற்கு பிடாரி கிராமத்தை சேர்ந்த முருகையன் மகன் முருகபாண்டியன் (24)ஆகிய 3 பேரும் ரயிலில் அடிபட்டனர்.
இதில் அருண் தலை துண்டித்தும், முருகபாண்டியன் உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பரத்குமார் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக டிரைவர் ரயிலை நிறுத்தினார். அது சற்று தொலைவில் போய் நின்றது. திருவிழா பந்தோபஸ்துக்கு வந்திருந்த போலீசார், மற்றும் பொதுமக்கள் பரத்குமாரை மீட்டு ஆம்புலன்சு மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
தகவல் அறிந்ததும் திருவாரூர் எஸ்.பி. சுரேஷ்குமார், திருச்சி ரயில்வே டிஎஸ்பி பிரபாகரன், திருவாரூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் சாந்தி, மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
ரயிலில் அடிபட்டு இறந்த 2 இளைஞர்களின் உடல்களையும் ரயில்வே போலீசார் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உடல்கள் ரயில்வே போலீசார் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பரத்குமார் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. மற்ற இருவரின் தந்தையர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் அவர்கள் வந்ததும் உடல் தகனம் நடைபெறும்.
விபத்தில் இறந்த பரத்குமார் பிளஸ்2 தேர்வு எழுதி உள்ளார். அருண்குமார் பிளஸ்1 தேர்வு எழுதி உள்ளார். முருகபாண்டியன் மைக் செட் தொழில் செய்து வந்தார்.